தேவதை என்பது நல்ல குணங்களைக் கொண்ட மனிதர்களுக்கான பொது அடையாளம் என்கிறார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் தேவதை என்கிற பதம் ஆண்களுக்கும் பொருந்தும் என்றும், பாலினத்தை வைத்து யார் தேவதை என்பதைப் பிரித்துப் பார்க்க முடியாது என்றும் கூறுகிறார். ஆண் தேவதை படத்துக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனினும் படத்தை வெளியிட போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று படக்குழுவினர் புலம்புகின்றனர். இந்நிலையில், யார் ஆண் தேவதை என்பது குறித்து பேசியுள்ளார் ரம்யா.
எல்லாருக்கும் அவர்களுடைய அப்பா, அம்மாதான் முதல் தேவதைகள் என்பது இவரது கருத்தாக உள்ளது. தனது தந்தை இப்போது உயிரோடு இல்லை என்றாலும், தேவதையாக இருந்து தம்மை ஆசீர்வதிப்பதாக உறுதியாக நம்பு கிறாராம். ரம்யாவுக்கு ஓர் அக்கா, ஒரு தம்பியும் உள்ள னர். வீட்டில் இவர்தான் செல்லப் பிள்ளையாம். "என் தந்தை என்னை ஆண் மகனைப் போன்றுதான் வளர்த்தார். வாழ்க்கைக்கு இன்றி யமையாத வேலைகள், பழக்க வழக்கங்கள் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்த தோடு இல்லாமல் அதில் பயிற்சியையும் கொடுத்தார்.
"நான்காம் வகுப்பு படிக்கும்போதே என்னு டைய உடைகளை நானே துவைக்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு காரணம் அப்பாவின் பயிற்சி தான்," என்கிறார் ரம்யா. சின்ன வயதிலிருந்தே தைரியத்தை மட்டும் ஊட்டி வளர்க்காமல் எந்த விஷயத்திலும் யாரையும் சார்ந்து வாழாமல் சொந்தக் காலில் நிற்பதற்கான பயிற்சியையும் தனது தந்தை அளித்திருப்பதாகக் குறிப்பிடுபவர், தானாக வளரும் மரம் தான் வலுவாக, உறுதியானதாக இருக்கும் என்று தன் தந்தை அடிக்கடி சொல்வார் என நினைவுகூர்கிறார். "அப்படித்தான் என்னைச் சுயமாக பல வேலைகளைச் செய்ய ஊக்கம் கொடுப்பார். இது ஆண்கள் செய்யும் வேலை, இது பெண்களுக்கான வேலை என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல், எல்லோருக்கும் எல்லா வேலையும் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லி சொல்லித்தான் எங்களை வளர்த்தார்.
"அந்த வகையில் சமைப்பது, துவைப்பது என்று வீட்டு வேலைகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி." யாரையும் நம்பி வாழாதே என்கிற அறிவுரை தான் ரம்யாவின் தந்தை மிகவும் அழுத்தமாகக் கூறியதாம். ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பதுதான் இந்த அறிவுரையின் சாரம் என்கிறார். கல்லூரிக்குப் போகும் வயதில்தான் தந்தை சொல்லிய அறிவுரைகளுக்கான உண்மையான அர்த்தம் தமக்குப் புரிய ஆரம்பித்தது என்று குறிப்பிடுபவர், தந்தையின் வழிகாட்டுதல் தான் தமக்குப் பெரும் தன்னம்பிக்கையைக் கொடுத்ததாகச் சொல்கிறார். அப்பாவால் தான் என்னால் இந்த உலகத்தை எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பகுதி நேர வேலையில் சேர்ந்துவிட்டேன். அதன் மூலம் எனக்குரிய செலவுகளை ஈடுகட்ட நானே சம்பாதிக்கத் துவங்கிவிட்டேன்," என்று பழைய சம்பவங்களை அசைபோடும் போது ரம்யாவின் உதடுகளில் மெல்லிய புன்னகை படர்கிறது.

