'பள்ளியில் நானும் காதலித்தேன்'

1 mins read
e9e8f193-71cd-4dd4-b47d-790408a3e221
-

இப்படி ஒரு பொண்ணு இருந்தால் அப்படி உயிரைக் கொடுத்துக் காதலிக்காமல் என்ன செய்வார்கள்? என்று '96' படத்தில் இளம் ஜானுவாக நடித்த கௌரி கிஷானைப் பார்த்து இளசுகள் பெருமூச்சு விடுகிறார்கள்! பெங்களூரில் பத்திரிகைத் துறை, உளவியல், இலக்கியம் படித்துக்கொண்டு இருக்கும் கௌரி. தன்னைப் பற்றி கூறுகையில், "பிறந்தது கேரளா. வளர்ந்தது சென்னை. இப்போது படிப்பது கர்நாடகா. அதனால் எனக்கு மொழிப் பிரச்சினையே இல்லை. அடிப்படையில் நான் பரதநாட்டியக் கலைஞர். நாடகம், மேடை நிகழ்ச்சிகளை நிறைய பார்த்திருக்கேன். ஆனால், சினிமா எனக்குப் புதிது. ஆரம்பமே இப்படி அமர்க்களமாக அமையும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"என் மாமா வழியாக '96' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. என் படிப்பு கெடாமல் படப்பிடிப்பு நடத்தி எனக்கு இந்தப் படம் மூலம் பேரும் புகழும் வாங்கித் தந்ததற்காக இயக்குர் ஆதித்யா பாஸ்கருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் முன்னால் எந்தத் தப்பு நடந்தாலும் என் குரல்தான் முதலில் எதிர்த்து ஒலிக்கவேண்டும் என்று விரும்புவேன். அதனால்தான் பத்திரிகையாளராக மாற விரும்பினேன். இப்போதைக்கு நடிப்புப் பற்றி எதுவும் யோசிக்கவில்லை. முதலில் படிப்பை முடிக்கவேண்டும். பிறகுதான் நடிப்பு. "பள்ளி படிக்கும் காலத்தில் எனக்கும் ஒரு காதல் இருந்தது. ஆனால் '96' படத்தைப்போல தீவிரமான காதல் இல்லை," என்று புன்னகையுடன் புருவத்தை உயர்த்திக்கூறுகிறார் சிறுவயது திரிஷாவாக நடித்த கௌரி.