அதிகமாக ஒப்பனை செய்து கொள்வதில் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்கிறார் காஜல் அகர்வால். அதேசமயம் தனது கதாபாத்திரத்துக்கு தேவையான அளவு ஒப்பனை செய்து கொள்ள என்றுமே தயங்கியதில்லை என்றும் கூறுகிறார். "எல்லோரையும் போல் வழக்கமான ஒப்பனை பொருட்களை மட்டுமே நான் பயன்படுத்துகிறேன். சின்னச்சின்ன அழகு சாதனப் பொருட்கள் மீதும் விருப்பம் உண்டு. "என் தங்கை நிஷாவுக்கு ஒப்பனைக் கலை அத்துப்படி. எனவே முக்கியமான தருணங்களில் அவரிடம்தான் ஆலோசனை கேட்பேன்.
சில நிமிடங்களில் பல அழகுக் குறிப்புகளை சொல்வதில் என் தங்கை கெட்டிக்காரி," என்று ஒரேடியாக இளைய சகோதரியைப் புகழ்ந்து தள்ளுகிறார் காஜல். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் வெளியே செல்லும் இவர் அறவே ஒப்பனை செய்து கொள்வதில்லை. முகப்பொலிவுக்காக சில ஜெல் வகைகளை மட்டும் பயன்படுத்துவாராம். "அப்புறம்... நிறைய பழரசங்கள் பருகுவேன். அதேபோல் தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரும் குடிப்பேன். எனது சருமம் சரியாகப் பராமரிக்கப்பட இந்தப் பழக்கம் கைகொடுக்கிறது," என்கிறார் காஜல்.

