தொலைக்காட்சிப் பாடல் போட்டி யில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் நாயகனாக நடித்துள்ள 'கரிமுகன்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியீடு காண உள்ளது. இப்படத்தைச் செல்லத் தங்கையா இயக்கி உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' போட்டியில் வெற்றி பெற்றவர் செந்தில் கணேஷ். இதில் நாட்டுப்புற பாடல்களைப் பாடி ஏராளமான இசைப்பிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றார். செந்தில் கணேஷ் புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாடல் போட்டியின்போது இவர் ராஜலட்சுமியுடன் இணைந்து பாடிய 'சின்ன மச்சான்' பாடல் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை 'சார்லி சாப்ளின்-2' படத்தில் பயன் படுத்தி உள்ளனர்.
இப்பாடல் செல்லத் தங்கையா எழுதியதாகும். இவர்தான் செந் தில் கணேஷின் குருநாதரும் ஆவார். இந்நிலையில் தனது சிஷ்யனை வைத்தே திரைப் படத்தை இயக்கியுள்ளார் செல்லத் தங்கையா. அதுமட்டுமல்ல, ஏற்கெனவே செந்திலை வைத்து 'திருடு போகாத மனசு' என்ற படத்தையும் எடுத்து வெளியிட்டுள்ளாராம். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. முகம் தெரியாத இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை நாளடைவில் பெரிதா கிறது. இதன் காரணமாக நன்கு அறிமுகமான இரு நபர்களுக்கு இடையே வீண் பிரச்சினை உண்டாகிறது. இதனால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன? அவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட இருவரும் எப்படி வெளியே வருகின்றனர் என்பதுதான் 'கரிமுகன்' படத்தின் கதையாம்.

