பாலியல் புகார் கூறிய விவகாரத்தில் கன்னடத் திரைப்பட வர்த்தக மன்றம் நடத்திய சமரச பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்ததால் நடிகை சுருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார் நடிகர் அர்ஜூன்.
அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் சுருதி ஹரிஹரன். அண்மையில் நடிகர் அர்ஜூனுடன் 'நெருங்கி வா முத்தமிடாதே', 'நிபுணன்' போன்ற படங்களில் நடித்த நடிகை சுருதி ஹரிஹரன் தன்னிடம் வரம்பு மீறி அர்ஜூன் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுக் கூறினார். அவருடைய பதிவில் "நிபுணன் படத்தின் படப்பிடிப்பில் அர்ஜூனுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது மகிழ்ச்சி அடைந்தேன். எங்களுக்கு இடையே காதல் காட்சி படமாக்கப்பட்டது. அதற்கான ஒத்திகையின்போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜூன் அப்போது வரம்புமீறி நடந்துகொண்டார்.
இப்படி ஒரு காட்சி இருக்கிறதா என்று அப்போதே நான் இயக்குநரிடம் கேட்டேன். ஆனால் அதற்கு அவரிடம் பதில் இல்லை. சினிமாவில் இது எல்லாம் சாதாரணம்தான் என்று உணர்ந்தேன். என் நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் கூறவில்லை. ஒப்பனை அறையில் இருந்தவர்களிடம் மட்டும் கூறினேன்," என்றார்.
சுருதியின் இந்தக் குற்றச் சாட்டுக்குப் பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துத் தெரிவித்து வந்தனர். மேலும் அவரை கர்நாடகத் திரைப்பட சங்கத்தில் இருந்து தடை செய்யவேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தினர். பின்னர் அர்ஜூனின் மாமனாரான ராஜேஷ் கர்நாடகத் திரைப்பட வர்த்தக மன்றத்தில் சுருதி மீது புகார் செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ள நிலையில் அர்ஜூன் மற்றும் சுருதி இடையே சந்திப்பை உருவாக்கி அதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண கர்நாடகத் திரைப்பட வர்த்தக மன்றம் முடிவு செய்தது. அதன்படி கூட்டம் நேற்று முன்தினம் கூடியது.
இந்தக் கூட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆனால் சமரச தீர்வை ஏற்க இருவருமே மறுத்துவிட்டனர். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று மன்ற நிர்வாகிகள் கூறினர். இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் வாங்கிய நற்பெயரை கெடுக்கும் வகையில் சுருதி பொய்யான புகாரைக் கூறிவிட்டார் என அர்ஜூன் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார். தற்பொழுது இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது என்று அதிர்ச்சியில் சுருதி ஹரிஹரன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

