நடிகர் விஜய் சேதுபதியும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக திரைத்துறையில் இருக்கும் முன்னணி நடிகர்களை வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி களை நடத்துவதில் தொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்டம் காட்டி வருகின்றன. சூர்யா, கமல், விஷால், பிரசன்னா, வரலட்சுமி, ஷ்ருதிஹாசன் எனத் திரை நட்சத்திரங்கள் நிகழ்ச்சி களைத் தொகுத்து வழங்கும் நிலையில், தற்போது அந்த வரிசை யில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைய உள்ளார்.
இந்தியில் அமீர்கான் தொகுத்து வழங்கிய 'சத்யமேவ ஜெயதே' போன்ற ஒரு நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். சமுகத்தில் நல்ல விஷயங்கள் செய்பவர்களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் நிகழ்ச்சி 'சத்யமேவ ஜெயதே'. விஜய் சேதுபதிக்கு 'மக்கள் செல்வன்' என்ற பெயர் ஏற்கெனவே இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு மிகப் பொருத்தமாக இருப்பார் என்று பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அவரை அணுகியுள்ளது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஒத்துக்கொண்டார். விஜய் சேதுபதிக்குத் தற்போது எட்டுப் படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

