பிச்சைக்காரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. அதனால் அவர் தற்போது நடித்துள்ள 'திமிரு புடிச்சவன்' படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்நிலையில் தீபாவளிக்கு வெளி வரவேண்டிய 'திமிரு புடிச்சவன்' படத்திற்குப் போதிய திரையரங்கம் கிடைக்காததால் பந்தயத் திலிருந்து வெளியாகிவிட்டதாக அறிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் ஆண்டனி, "என்னுடைய கடந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
வியாபார ரீதியாக நஷ்டம் அடைந்ததால் பல பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். பல தடைகளைத் தாண்டித்தான் இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், 'சர்கார்' படம் அதிக திரையரங்குகளில் வெளியாவதால் எங்களுடைய படத்திற்கு போதிய திரையரங்கம் கிடைக்கவில்லை. "ஏற்கெனவே அதிகப் பிரச்சினையில் இருப்பதால் இந்தப் படத்தை அவசரம் அவசரமாக தீபாவளிக்கு வெளியிட்டு நஷ்டம் அடையவேண்டாம் என்ற நோக்கத்தில் நவம்பர் 16ஆம் தேதி வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்," என்றார் விஜய் ஆண்டனி. இந்த தீபாவளிக்கு விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'சர்கார்' படமும் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

