'இவ்வளவு பாராட்டுகளை எதிர்பார்க்கவில்லை'

'இவ்வளவு பாராட்டுகளை எதிர்பார்க்கவில்லை'

2 mins read
b02a4a4d-3cf9-4bb0-979c-3f3e2fd717bc
-

பொதுவாக அனைத்துப் படங்களிலும் நல்ல நடிப்பை வழங்குவதுதான் ஐஸ்வர்யா ராஜே‌ஷின் வழக்கம். படத்துக்குப் படம் அவரது நடிப்பை விமர்சகர்கள் தவறாமல் பாராட்டுகின்றனர். இந்நிலையில் 'வடசென்னை' அவரை இன்னும் ஒரு படி உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. அந்தப் படத்தில் பத்மா என்ற கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார் ஐஸ். எனினும் இந்தளவு பாராட்டுகள் குவியும் என எதிர்பார்க்கவில்லையாம். இந்த வருட தீபாவளி இவருக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறி உள்ளாராம். தனது நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறி உள்ளதாகப் பூரித்துப் போகிறார்.

"வடசென்னை' படத்தில் நான் வசனம் பேசிய விதம் நன்றாக இருந்ததாக எல்லோரும் சொல்கிறார்கள். அக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. தேர்வு வைத்துதான் என்னைத் தேர்ந்தெடுத்தனர். நான் மெனக்கெட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது," என்கிறார் ஐஸ்வர்யா. சில காட்சிகளில் நாயகன் தனுஷை திட்டவேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் சொன்னபோது அதிர்ந்து போய்விட்டாராம்.

தனுஷை திட்டினால் அவரது ரசிகர் களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி இருக்கும் என்று பயந்தாராம். வெற்றிமாறன்தான் தைரியமூட்டி நடிக்க வைத்திருக்கிறார். "ஆனால் நான் பயந்தபடி ஏதும் நடந்துவிடவில்லை. காரணம், படம் பார்த்த அனைவருமே நான் ஏற்று நடித்த பாத்திரமாகத்தான் என்னைப் பார்த்தனர். எனவேதான் 'இவள் நம்ம வீட்டுப் பெண்' என்று கொண்டாடினார்கள். "நானும் திரையரங்கம் சென்று படத்தைப் பார்த்தேன். நயன்தாரா, திரிஷாவுக்கு இணையாக எனது நடிப்புக்கும் வரவேற்பு கிடைத்தபோது உற்சாகமாக இருந்தது," என்கிறார் ஐஸ்வர்யா. தனு‌ஷுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாம். 'வடசென்னை' படப்பிடிப்பின்போதுதான் அவரை முதன்முதலாக சந்தித்ததாகச் சொல்கிறார்.