நயன்தாராவின் 34வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவரின் காதலர் விக்னேஷ் சிவனிடம் "இந்த ஆண்டு எங்கள் செல்லம் நயன்தாராவை நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்கள் என்று நினைத்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. அடுத்த ஆண்டாவது எங்கள் செல்லத்தை திருமணம் செய்துகொள்ளுங்கள் விக்னேஷ் சிவன்," என்று டுவிட்டரில் நயனின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே. நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூசை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகிறது.
நயன்தாராவை மனதில் வைத்து இன்று பல கதைகள் உருவாக்கப் படுகின்றன. இதன்மூலம் ஆண் நடிகர்கள் மட்டுமே கோலோச்சும் தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகையாக நயன்தாரா தன் ஆளுமையை ஆழமாக நிரூபித்துள்ளார். தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்துவிட்டாலும் ஒவ்வொரு முறையும் நயன்தாராவின் படம் வெளியாகும்போதும் நயன்தாராவுக்காக இந்தப் படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வதுதான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை. அதுதான் இத்தனை ஆண்டுகால தமிழ்த் திரை வரலாற்றில் நயன்தாராவை ஒரு தனித்துவமான நாயகியாகவும் கொண்டாட வைக்கிறது.
நயன்தாரா நேற்று முன்தினம் தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து அன்றைய நாளை சிறப்பாக்கினார்கள். நயன்தாரா தனது பிறந்தநாளைக் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் ஸ்பெஷலாக கேக் ஆர்டர் செய்து, வீட்டை அலங்கரித்து அசத்தியுள்ளார். கேக் வெட்டியபோது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நயன்தாரா ரசிகர்கள் அவரிடம் ஒரேயொரு கோரிக்கையை விடுத்துள்ளனர்.

