விமல் நடித்த பட சுவரொட்டியில் சாணம் அடித்த பெண்கள்

விமல் நடித்து ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் ஓடும் திரையரங்கில் மாதர் சங்கத்தினர் புகுந்து ரகளை செய்ததால் படம் பார்த்தவர்கள் தலை தெறிக்க ஓடினார்கள். ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான படம். படத்தில் ஆபாச காட்சிகள் அதிகம் என்றும் பெண்களைக் கேலி செய்யும் வசனங்களும் நிறைய உள்ளன என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மதுரை காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா சினி காம்ப்ளக்ஸுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் சென்றனர். காம்ப்ளக்ஸில் ஒட்டியிருந்த விமல் படத்தின் சுவரொட்டிகளைச் செருப்பால் அடித்ததுடன் சாணம் அடித்தனர். இந்த ஆபாச படத்திற்கு உடனே தடை விதிக்கக் கோரி திரையரங்கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் தவறுகளை அதிகப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் சுவரொட்டிகள் பள்ளி, கல்லூரி கள் இருக்கும் பகுதியில் அதிக அளவு ஒட்டப் பட்டுள்ளன. அதனால் பெண் குழந்தைகளுக்கு மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும். படத்தின் பெயரே மிகவும் மோசமாக உள்ளது. ‘100% கிளாமர்’ என்றும் போஸ்டர் களில் குறிப்பிடப் பட்டுள்ளது. தணிக்கை சான்றுகள் பற்றிய குறியீடுகள் இல்லை. இதை எவ்வாறு மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது என்று தெரியவில்லை. எனவே சமுதாயத்தை சீர்குலைக்கும் வகையான இந்தப் படத்தையும் சுவரொட்டிகளையும் தடை செய்யவேண்டும்,” என்று தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்