நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடித்ததால் கீர்த்தி சுரேஷ் பக்கம் பலமான அதிர்ஷ்டக்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகையர் திலகத்தின் வாழ்க்கை வரலாற்றில் சாவித்திரியாக நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளி வந்ததிலிருந்து குருவி தலையில் பனங்காயை வைத்தது போல கீர்த்தியால் நடிகை சாவித்திரியைப்போல நடிக்க முடியாது என்று பலரும் கிண்டல் செய்தனர்.
அந்த நேரத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி, படத்திலிருந்து விலகப் போவதாக கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந் தார். பின்னர், தன்னைக் கிண்டல் செய்தவர்கள் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் 'சாவித்ரி' படத்தில் நடித்து, அனைவரையும் கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்ததைப் பார்க்கும்போது நடிகையர் திலகம் சாவித்திரியே நேரில் வந்ததுபோல் இருந்ததாக அவரைக் கிண்டல் செய்தவர்களே பாராட்டினர். படம் வெளியானதிலிருந்து கீர்த்தி யின் பக்கம் அதிர்ஷ்டக்காற்று பலமாக வீசத் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. தொடர்ந்து பல படங்களில் நடித்ததால் ஓய்வு எடுத்துக் கொண்டு தற்பொழுது புத்துணர்ச்சியுடன் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

