அமலா பாலின் அண்மைக்கால திரைப்படங்களின் 'ஃபர்ஸ்ட்லுக்' சுவரொட்டிகளால் படம் எப்படி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது அந்த வரிசையில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு பெண் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் 'திரில்லர்' படம் இது. ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளைச் சுற்றி நடக்கும் கதை இது.
மேலும், இந்தப் படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி உமாதத்தன் கையாண்ட ஓர் உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர், அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் 6 மாதங்கள் ஆழமாக கலந்துரையாடி இந்தக் கதையை எழுதியிருக்கின்றனர். தடய அறுவை மருத்துவத்தை பற்றி அறிந்துகொள்ள பல மருத்துவக் கல்லூரிகளை இவர்கள் இருவரும் பார்வையிட்டனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மொத்த படமும் படமாக்கப்பட இருக்கிறது. அதற்கு இப்போதிலிருந்தே தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறார் அமலா பால்.

