நயன்தாராவை முந்திய கதாநாயகி

நயன்தாராவை முந்திய கதாநாயகி

2 mins read
bd9f58b4-109f-49e5-beaf-7f34b9893592
-

திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுவதாகக் கருதிவிட வேண்டாம். ஒன்றிரண்டு காட்சிகளில் வந்து போகும் துணை நடிகர்களுக்கு மத்தியிலும்கூட ஏதேனும் ஒரு வகையில் போட்டி இருக்கும். அதில் வெற்றி பெறுவதற்கு கடும் உழைப்புடன் அதிர்ஷ்டமும் தேவை. இதை உணர்ந்து, உழைப்பில் குறை வைக்காதவர்கள் எளிதில் பல உயரங்களைச் சென்றடைகிறார்கள். அதற்கு கோடம்பாக்கத்தில் சிறந்த உதாரணம் என்றால் அது நயன்தாராதான் என்கிறார்கள். அவரது இடத்தைப் பிடிக்க சக நடிகைகள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் நயன்தாரா படத்தின் சாதனையை முறியடித்துள்ளது காஜல் அகர்வாலின் புதுப் படம். இதையடுத்து அவரது வட்டாரம் உற்சாகத்தில் மிதக்கிறதாம்.

கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரியளவில் வெற்றி பெற்ற படம் 'குயின்'. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மறுபதிப்புசெய்யப்பட்டுள்ள இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. முதல் நாளே பல லட்சம் பேர் கண்டு ரசித்தனர். சமூக வலைத்தளங்களில் காஜலுக்குப் பாராட்டு குவிந்தது. 'குயின்' படத்தின் தமிழ் மற்றும் கன்னட பதிப்பு களை நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் நடித்துள்ள படத்திற்கு 'பாரீஸ் பாரீஸ்' என்றும், கன்னடத்தில் பருல் யாதவ் நடித்துள்ள படத்திற்கு 'பட்டர்ஃபிளை' என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்குச் செல்லும் ஓர் இளம்பெண் அங்கு எதிர்கொள்ளும் அனுபவங்களை உள்ளடக்கியதே இப்படத்தின் கதை. இதில் கதைப்படி விருதுநகரைச் சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளார் காஜல். அண்மையில்தான் இவரது நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு புதுப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. எனவே 'பாரீஸ் பாரீஸ்' முன்னோட்டத்தை ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனித்தனர். எனினும், எந்தவித சர்ச்சையும் எழவில்லை. இதனால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ள நிலையில், இந்த முன்னோட்டத்தை இதுவரை 72 லட்சம் பேர் பார்த்துள்ள தகவல் வெளியாகியுள் ளது. தமிழைப் பொறுத்தவரை நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களின் முன்னோட்டத்தை ரசிகர்கள் அதிகம் பார்ப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா' பட முன்னோட்டத்தை 60 லட்சம் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இது பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. இந்நிலையில், காஜல் நடித்துள்ள படத்தை 72 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்தி ருப்பது புதுச்சாதனையாக கோடம் பாக்கத்தில் பதிவாகி உள்ளது.