ஏமியும் இங்கிலாந்தைச் சேர்ந்த பணக்காரர்களில் ஒருவரான ஆன்ட்ரியஸின் மகனான ஜார்ஜும் காதலித்து திருமணம் செய்ய நிச்சயம் செய்திருக்கின்றனர். ஜார்ஜின் சொத்து மதிப்பைக் கேள்விப்பட்ட மற்ற நடிகைகள் "ஏணி வைத்தாலும் இனி யாரும் ஏமியை எட்டிப் பிடிக்கமுடியாது," என்று புலம்புகின்றனர். ஏமியும் ஜார்ஜும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக ஊர் சுற்றினாலும் காதலை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் அவர்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. ஜார்ஜ் ஏமியை அழைத்துக்கொண்டு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியாவுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார். ஜாம்பியா காட்டிற்குள் சென்று ஜார்ஜ் ஏமியிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டு ஒரு வைர மோதிரத்தை ஏமிக்கு அணிவித்திருக்கிறார். ஜார்ஜ் தனக்கு அணிவித்த பெரிய வைர மோதிரத்துடன் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படத்தை ஏமி 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டுள்ளார். முன்னதாக ஏமி ஜார்ஜுடன் சேர்ந்து கிறிஸ்மஸ் கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களையும் 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டிருக்கிறார். புது வீட்டில் கிறிஸ்மஸை கொண்டாடியதாகவும் பதிவிட்டிருந்தார்.
ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ். இவர் 'அபிலிட்டி' குழு என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,500 கோடிக்கும் மேல் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏமி ஜாக்சன் 'தாண்டவம்', 'தங்கமகன்', 'கெத்து', 'தெறி', 'தேவி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்தது '2.0'. ரஜினியுடன் நடித்து சங்கர் தயாரிப்பில் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் தமிழைத் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் புகழ்பெற்ற 'சூப்பர் கேர்ள்' என்ற இணையத் தொடரிலும் ஏமி நடித்துள்ளார். விஜய், தனுஷ், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் மட்டுமே 'சில்வர் ஸ்கிரீனில்' நடித்து வந்த ஏமிக்கு தற்பொழுது எந்தப் படமும் கைவசமில்லை. அதனால் ஏமி அவரது சொந்த நாடான லண்டனில் தனது காதலருடன் ஓய்வு எடுத்து வருகிறார். நடிகை ஏமி ஜாக்சனுக்கும் அவரது காதலருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. ஜார்ஜ் இப்போது எபிலிட்டி குழுவின் தலைவராக உள்ளார். அவரின் குடும்பத்திற்குச் சொந்தமாக பல சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. இவர்களின் சொத்து மதிப்பு 2020இல் ரூ.4,000 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

