ஐம்பது நண்பர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தின் பெயர் 'நெடுநல்வாடை'. செல்வக்கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். சிலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ள இவர், நீண்ட காலமாக சொந்தமாகப் படம் இயக்க முயன்று வந்துள்ளார். ஆனால், அதற்கான வாய்ப்புதான் அமைந்த பாடில்லை. இந்நிலையில் தனது கல்லூரி நண்பர்கள் இருவரைச் சந்தித்துள்ளார். அப்போது தனது முயற்சிகள் குறித்துச் செல்வக்கண்ணன் விவரிக்க, அந்த இரு நண்பர்களும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் 'நெடுநல் வாடை' உருவாகி உள்ளது.
"கடந்த 2000ஆம் ஆண்டு நெல்லையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந் தேன். அப்போது என்னுடன் படித்த நண்பர்களில் பலர் தற்போது இந்தியா விலும் வெளிநாடுகளிலும் உள்ள பெருநிறுவனங்களில் பொறியியலாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
"இந்நிலையில் எனது நண்பர்களில் இருவரைச் சந்தித்தபோது என் நிலை குறித்துப் புலம்பித் தீர்த்தேன். அவர்கள் இருவரும் எனக்கு ஆறுதல் கூறியதுடன் படம் தயாரிக்கவும் முன்வந்தனர். உடனடியாக எங்களது மற்ற நண்பர்களை இடைவிடாமல் தொடர்புகொண்டு பேசினர்.
"இதன்மூலம் 50 பேர் எனக்காக கூட்டு முயற்சியில் படம் தயாரிக்க முன்வந்தனர். அதன் பலனாக எனது முதல் படத்தை வெற்றிகரமாக இயக்கி உள்ளேன்," என்று நெகிழ்ச்சியுடன் நடந்ததை விவரிக்கிறார் செல்வக் கண்ணன்.

