'இந்தியன் 2' படத்திலிருந்து சிம்பு நீக்கம்

இயக்குநர் ஷங்கர் - உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் சக்கைப்போடு போட்டது. இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலின் பேரன் வேடமேற்று நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இதற்கிடையே, சுந்தர் சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. ஆனால், படத்திற்கு சிம்பு சரியான ஒத்துழைப்புத் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடுப்பான லைக்கா நிறுவனம், இந்தியன் 2 படத்தில் சிம்பு வேண்டாம் என ஷங்கரிடம் கூறியதாகவும் அதற்கு அவரும் சம்மதித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புவுக்குப் பதிலாக நடிகர் சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இன்னும் மூன்று நாட்களில் படப்படிப்பு தொடங்கவிருப்பதாகவும் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் கமல் 50 நாட்களை ஒதுக்கித் தந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.