கங்கனா மீது இயக்குநர் குற்றச்சாட்டு

ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ‘மணிகர்ணிகா’ இந்திப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதில் பணியாற்றிய தனது பெயரைப் பட நாயகியும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத் இருட்டடிப்பு செய்துவிட்டதாக இயக்குநர் கிரிஷ் புகார் எழுப்பி உள்ளார். 
இப்படத்தை இயக்குவதற் காகத் தமது வாழ்நாளில் 400 நாட்களைச் செலவிட்டுள்ளதாக வும் தமக்குப் பேசப்பட்ட சம்பளத் தில் 30 விழுக்காட்டை மட்டுமே தந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“கடந்த ஜூன் மாதமே இப்படத்துக்கான பணிகளை முடித்து விட்டேன். கங்கனா ரணாவத் சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்றார். அதற்கு நான் மறுத்தபோது அவரே அந்தக் காட்சிகளைப் படமாக்கினார். கடைசியில் இயக்குநர் என்று தனது பெயரையே போட்டுக் கொண்டுள்ளார். இயக்குநருக்கான பணிகளை மேற்கொள்ளாதபோது அவர் எப்படி இவ்வாறு செய்யமுடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கிரிஷ். 
இதற்கு கங்கனா தரப்பில் அவரது சகோதரி ரங்கோலி சந்தேல் பதிலளித்துள்ளார்.
“கிரிஷ் சற்று அமைதியாக இருங்கள். நீங்கள்தான் முழுப் படத்தையும் இயக்கினீர்கள். எனினும் கங்கனாதான் இந்தப் படத்துக்கான அடையாளம். அவரே எல்லோருக்கும் தெரிந்த முகம். எனவே இந்த வெற்றியை அவரைக் கொண்டாட அனுமதியுங்கள்,” என்று கூறியுள்ளார் ரங்கோலி சந்தேல்.