மகிழ்ச்சியில் மிதக்கும் நாயகி

போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘பிங்க்’ இந்திப் படத்தின் மறுபதிப்பாக உருவாகும் இந்தப் புதிய படைப்பில் அஜித் ஜோடியாக இந்தி நடிகை வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகி உள்ளனர். 
இந்நிலையில் அஜித் பட வாய்ப்பு தமக்கு மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சி யையும் அளித்திருப்பதாகக் கூறுகிறார் ஷ்ரத்தா. இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். 
அஜித் படத்தில் தாம் நடிக்க இருப்பதாக அண்மையில் வதந்தி பரவியது என் றும், தற்போது அத்தகவல் உண்மையாகி உள்ளது என் றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
“அஜித் படத்தில் நான் நடிப்பதாக சிலர் ஆரூடம் வெளியிட்டிருந்த னர். தொடக்கத்தில் நானே அதை நம்பவில்லை. 
“இந்நிலையில் அந்த வதந்திகள் இன்று உண்மை யாகி விட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அஜித் நடிக்கும் அற்புதமான படத்தில் நானும் பங்காற்றுகிறேன்.
“அஜித் படத்தில் நடிப்பது குறித்து பலரும் விவரம் கேட்டபோது மௌனமாக இருக்க நேரிட்டது. அது மிக கடினமான விஷயம். இப்போது இத்தகவலை அதிகாரபூர்வமாகத் தெரி வித்துள்ளனர். அதன் பிறகு ஆர்வம் கலந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
“அஜித்துடன் நடிப்ப தில் மகிழ்ச்சி. இதுவரை நான் நடித்த கதாபாத்தி ரங்களைவிட சவாலான ஒரு கதாபாத்திரம் எனக் காகக் காத்திருக்கிறது என்பதை நம்பிக்கையுடன் கூறமுடியும்,” என்கிறார் ஷ்ரத்தா. 
இந்தப் புதிய படத்தை வினோத் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படிப்பட்ட நல்ல அணியுடன் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது  என்கிறார் ஷ்ரத்தா.
அனைவரும் பார்க்கவேண்டிய கதையுடன் இப்படம் தயாராகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இந்தக் கதை சென்றடையவேண்டும் என்பது அவசியம் என்கிறார்.
“இப்போதைய சூழலில் அனைவருக்கும் தேவையான ஒரு விஷயத்தை இந்தப் படம் சொல்லப் போகிறது. இந்த நோக்கம் நிறைவேற முழுமையான அர்ப்பணிப்புடன் எனது பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கிறேன். 
“இந்தப் படத்தில் நடிப்பதற்காக குவிந்துள்ள வாழ்த்துச் செய்திகள் அனைத்தையும் ஒவ் வொன்றாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்காக மகிழ்ச்சி அடையும் அனைவருக்கும் எனது நன்றி. எனது பயணம் குறித்த அனைத்து அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது போல் உணர்கிறேன்,” என்று ஷ்ரத்தா ஸ்ரீநாத் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ‘பிங்க்’ இந்திப் பதிப்பில் நாயகியாக நடித்துள்ள நடிகை டாப்சி, தமிழ்ப் பதிப்பில் நாயகியாக நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ‘பிங்க்’ தமக்கு வெற்றிப் படமாக அமைந்தது போல் ஷ்ரத்தாவுக்கும் அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். டாப்சி நடித்த வேடத்தில் ஷ்ரத்தா கதாநாயகியாக நடிக்கிறார். 
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வந்த டாப்சி இந்தியிலும் நடித்தார். இந்நிலையில் ‘பிங்க்’ தான் அவருக்குப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தியின் முன்னணி கதாநாயகி யாகவும் மாற்றியது. 
‘பிங்க்’ தமிழ்ப் பதிப்பின் படப்பிடிப்பு டிசம் பர் மாதமே துவங்கிவிட்டது. சிறிய இடை வெளிக்குப் பிறகு பிப்ரவரி மாதம் மீண்டும் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.