தமிழிலும் கண்ணடிக்க வரும் பிரியா வாரியார்

மலையாளப் படத்தில் கண்ணடித்து ஒரே இரவில் பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியார், இப்போது தமிழ்மொழி மறுபதிப்பிலும் கண்ணடித்து ரசிகர் களைக் கிறங்கடிக்க உள்ளார்.   
பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘ஒரு அடார் லவ்’ படம் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியீடாக உள்ளது.  
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளி லும் மறுபதிப்பாக உள்ளது. தமிழில் இப்படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணு வெளியிட உள்ளார்.  
படத்தின் தமிழ் பதிப்பு உரிமையை வாங்க பலரும் போட்டிபோட்டனர். ஆனால் படத்தின் விலை ரூ.1 கோடி என்று சொல்லப்பட்டதால் அனைவரும் படத்தை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கி விட்டனர்.
கடைசியில் கலைப்புலி தாணு ரூ.1 கோடி கொடுத்து ‘ஒரு அடார் லவ்’ படத்தின் தமிழ் மறுபதிப்பு உரிமையை தைரியமாக வாங்கி வெளியிட உள்ளார். 
இப்படத்தை மலையாளத்தில் தயாரித்திருப்பவர் அவுசேப்பச்சன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்க மலராய்’ என்ற பாடல் காட்சியில் காதலனைப் பார்த்து இவர் கண்ணடிக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி ஒரேநாளில் பிரபலமானார். 
இன்னொரு பக்கம் இப்பாடல் சர்ச்சைக்கு உள்ளாகி வழக்குகளையும் சந்தித்தது.
  இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த, இரண்டாவது படத்திலேயே பாலிவுட் பக்கம் சென்றவர், ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தில் நடித்தார். 
இது நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கைக் கதையை பிரதிபலிப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது. 
இந்த இரண்டாவது படத்திலேயே புகை பிடிக்கும் காட்சி, மது அருந்தும் காட்சி என்று பெரும் களேபரம் செய்து பரபரப்பைக் கூட்டினார். 
இந்நிலையில்,  ‘ஒரு அடார் லவ்’  தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த பிரியா வாரியார், “எனது முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ தமிழில் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் தமிழில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. நிறைய தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. கதையை நுணுக்கமாகக் கேட்டு வருகிறேன். 
“கண்ணடித்தது மூலம் புகழ்பெற்றது நானே எதிர் பார்க்காத ஆச்சரியம். இதற்காக என் மீது நிறைய வழக்கு போட்டார்கள். அது தள்ளுபடி ஆனது.
“ஸ்ரீதேவி பங்களா படத்திற்கும் எதிர்ப்பு வந்திருப்பது எனக்குத் தெரியும். அதை தயாரிப்பாளர் பார்த்துக் கொள்வார். அது ஸ்ரீதேவி மேடத்தின் கதையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நடிகையின் கதை என்று மட்டும் சொல்வேன்,” என்கிறார்.