பாம்புப் பெண்ணாக நடிக்கும் வரலட்சுமி

‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா 2’ என்ற பெயரில் தற்போது தயாராகி உள்ளது. இதில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்கும் எல்.சுரேஷ் கூறும் போது, “இதுவும் ‘நீயா’ படம் போன்று பழிவாங்கும் பாம்பு கதைதான்,” என்றார். 
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ல் வந்த படம் ‘நீயா’. இதன் 2ஆம் பாகம் 39 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய பரிமாணத்தில் தயாராகிறது. 
“இப்படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராட்சதப் பாம்பு இடம்பெறுகிறது. அதன் தோற்றத்தை இறுதி செய்ய பல நாடுகளுக்கும் பயணித்தோம். 
“கடைசியாக தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள ராஜ நாகத்தின் அமைப்பு, உடல்வாகு, குணங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப கதையை உருவாக்கினோம். நாயகனாக ஜெய், நாயகிகளாக வரலட்சுமி, கேத்தரின் தெரசா, ராய்லட்சுமி நடிக்கின்றனர். 
“பாம்புப் பெண்ணாக வரலட்சுமி நடிக்கிறார். பாம்பின் தோற்றத்தை ஹாலிவுட் தரத்தில் கிராபிக்சில் மிரட்டலாக படமாக்கி உள்ளோம்,” என்றார்.
‘நீயா 2’ படம் மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது. ஏற்கெனவே ‘பில்லா’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘சண்டக் கோழி’, ‘சிங்கம்’, ‘மாரி’, ‘விஸ்வரூபம்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘சாமி’ உள்ளிட்ட சில படங்களின் 2ம் பாகங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் இப்படமும் வெளிவர உள்ளது.