சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்

சூர்யாவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக படக்குழுக்கள் தெரிவித்ததையொட்டி சூர்யா ரசிகர்கள் இரட்டிப்புக் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். ‘என்ஜிகே’ படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் படத்தில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப் படம் ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளதாக படக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். சூர்யாவின் மற்றொரு படமான ‘காப்பான்’ படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தை சூர்யா நடித்த ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்குகிறார். சூர்யா வுடன் ஆர்யா, மோகன்லால், சாயிஷா, பொம்மன் இரானி, சமுத்திரகனி, பிரேம் உள்பட பலர் நடிக்கிறார்கள். பட்டுக் கோட்டை பிரபாகர் கதை, வசனம் எழுத, ஆண்டனி எடிட்டராக பணியாற்றுகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கே.வி.ஆனந்த் தன் படங்களுக்குத் தூய தமிழில் தலைப்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டவர். அதுவும் அவை அதிகம் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ ஆகியவை சில உதாரணங்கள். இந்தப் படத்திற்கு ‘காப்பான்’ என்று தலைப்பு வைத்து இருக்கிறார்.