‘வில்லி வேடத்தில் நடிக்க ஆசை’

வில்லி வேடங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் தமது ஆசை என்கிறார் சோனா. மேலும் குணச்சித்திர வேடங்கள் என்றாலும் நடிக்கத் தயார் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சோனாவுக்கு நேரம் சரியில்லை போலும். எந்தவித படவாய்ப்பும் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிவிட்டார். இந்நிலையில் ‘அவதார வேட்டை’ என்ற படத்தில் வில்லியாக அசத்தியுள்ளாராம்.
“தொடக்கத்திலேயே என்னைக் கவர்ச்சி நடிகை என்று முத்திரை குத்திவிட்டனர். முதலில் அது குறித்து நான் கவலைப்படவில்லை. ரசிகர்களும் எனக்கு நல்ல வரவேற்பை அளித்தனர். “எனினும் ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டுவிட்டது. ரசிகர்களும்கூட என்னைப் போன்றே சலிப்படைந்து இருப்பார்கள் என நினைக்கிறேன்.
“எனவே கவர்ச்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாம் என முடிவு செய்தேன். ஆனால் இந்த முடிவை திரையுலகத்தினர் விரும்பவில்லை போலிருக்கிறது,” என்று சோகத்துடன் சொல்கிறார் சோனா.
கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் புதுப்படங்களில் நடிக்க இவரை யாருமே ஒப்பந்தம் செய்யவில்லையாம். இதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி தவித்ததாகச் சொல்கிறார்.