நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் படம் தயாரிக்கிறார்

நயன்தாரா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்துள்ள படம் ‘விஸ்வாசம்’. அஜித் ஜோடியாக இந்தப் படத்தில் நடித்தார் நயன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்த இந்தப் படம், ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் வெளிவரவுள்ளது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘Mr. லோக்கல்’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்குப் படத்திலும், ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது விஜய் ஜோடியாக ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. ‘வில்லு’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். அட்லீ இயக்கிவரும் இந்தப் படத்தை, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது.

விவேக், கதிர், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பாடல்களை விவேக் எழுதுகிறார். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெளிநாடுகளிலும் சில காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர்.

இந்தப் படத்துக்குப் பிறகு, ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிக்கிறார் நயன்தாரா. கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தை, இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.