முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தர்மபிரபு’

இப்போது கோடம்பாக்கத்தில் யோகி பாபு காட்டில்தான் அடைமழை. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்னும் அளவுக்கு ஏராளமான படங் களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
இந்நிலையில் திலீபன், ரமேஷ் திலகன் ஆகியோருடன் இவர் இணைந்து நடிக்கும் ‘தர்மபிரபு’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை முத்துக்குமரன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு விமல், வரலட்சுமி நடித்துள்ள ‘கன்னி ராசி’ படத்தை இயக்கியவர். 
‘தர்மபிரபு’வில் ஜனனி ஐயர், மேக்னா நாயுடு ஆகிய இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
“இது முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது. யோகிபாபு எம தர்மன் வேடத்தில் நடிக்கிறார். அவரது தந்தையாக ராதாரவி நடிக்க ரமேஷ் திலக் சித்ரகுப்தனாக அசத்தியுள்ளார். “எமலோகம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கு அமைத்து எடுத்துள்ளோம். பிரபாகரன் இசையமைக்க, ரங்கநாதன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். 
“நகைச்சுவைப் படமென்பதால் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும். 
“குறிப்பாகச் சொல்வதென்றால் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே கவலையை மறந்து சிரிக்க வைக்கும். எமலோக அரங்கு பெரும் பொருட்செலவில் அமைக்கப் பட்டுள்ளது.
“காட்சிகள் திருப்திகரமாக வரும் வரை படமாக்குங்கள் என்று கால அவகாசம் அளித்து சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்த தயாரிப்பாள ருக்கு நன்றி,” என்கிறார் இயக்குநர் முத்துக்குமரன்.