கார்த்திக்: ‘புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்’

திரைப்படப் பாடகர் கார்த்திக்கைப் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் பல மாதங்களாகப் பின்தொடர்ந்து வருகின்றன. இதுவரை அமைதி காத்த கார்த்திக், தான் நிரபராதி எனத் தெரிவித்ததாகத் தமிழகத் திரை ஊடகங்கள் கூறுகின்றன.

பெண்களிடம் தகாத வகையில் கார்த்திக் நெருங்கிப் பழகியதாகவும் அந்தப் பெண்களுக்கு ஆபாசமான முறையில் குறுந்தகவல்கள், காணொளிகள் ஆகியவற்றை அனுப்பியதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள கார்த்திக், தன்னால் பாதிக்கப்பட்டதாகக் கூறுபவர்கள் தன்னை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டிருக்கிறார். 

ஆயினும், கார்த்திக்கைக் குற்றம் சாட்டும் பெண்களைத் தான் நம்புவதாக பாடகி சின்மயி தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். பாலியல் தொல்லையின் தொடர்பில் பாடலாசிரியர் வைரமுத்துவை முதன்முதலாக குற்றம் சாட்டிய சின்மயி, கார்த்திக் தனது புகழைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வருவதாகத் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

அதிகாரம் படைத்தவர்கள் பாலியல் தொந்தரவு செய்வதைச் சாடும் ‘மீ டு’ என்ற உலகளாவிய இயக்கத்தின் சூடு இந்திய திரை உலகில் தணிந்தபாடில்லை. ‘மீ டு’ என்ற அனல் வெட்ட வெளிச்சமாக அடுத்து எதனைக் காட்டும் என்ற கேள்வி ரசிகர்களின் மனதில் உள்ளது.