கடன் பிரச்சினையில் சிக்கியிருந்த தனு‌ஷின் படம் இம்மாதத்தில் வெளியீடு

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்டு இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கி உள்ளார். தயாரிப்புத் தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்தப் படத்துக்குப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு இடைவெளி விட்டுவிட்டு நடந்தது.
இதற்குள் தனுஷ் நடித்த ‘வடசென்னை’, ‘மாரி 2’ படங்களும் நாயகி மேகா ஆகாஷ் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களும் வெளிவந்து விட்டன. ‘பூமராங்’ படம் வெளிவர உள்ளது. தற்போதுதான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. ஆனாலும் படம் வெளிவருவதற்குப் பல சிக்கல்கள் இருந்தன. படத்தைப் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருக்கிறது. வெற்றிபெறுவது உறுதி என்று கூறியதைத் தொடர்ந்து இதில் நல்ல முடிவு எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வரும் மார்ச் 28ஆம் தேதி படம் வெளிவருவது உறுதியாகி உள்ளது.