கலைமாமணி விருதுகள்: 201 கலைஞர்களுக்கு மரியாதை

தமிழக மாநில அரசு, கலாசாரத்திற்குப் பங்காற்றிய 201 கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருதுகளை வழங்கியது. எழுத்தாளர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரின் கலைச்சேவையைப் பாராட்டும் இந்த விருது வழங்கப்பட்டது.

எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், செவ்விசைப் பாடகர்கள் நெய்வேலி சந்தானகோபாலன், ஷோபனா விக்னேஷ் மற்றும் மகாராஜபுரம் ராமச்சந்திரன், கர்நாடக வயலின் கலைஞர் லால்குடி விஜயலட்சுமி, கிராமியக்கலைஞர் பரவை முனியம்மா, நாடக நடிகர் மாலி, சிற்பக்கலைஞர் திருஞானம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

‘தி இந்து’ பத்திரிகையின் முன்னைய மூத்த செய்தியாளர் அஷோக் குமாருக்கும் இவ்விருது கொடுக்கப்பட்டது.

திரைப்படத்துறையில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி ஆகியோருடன் நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி, சசிகுமார், பிரியாமணி, ஸ்ரீகாந்த், பிரசன்னா, நளினி, பாண்டியராஜன், சந்தானம், பழம்பெரும் நடிகை காஞ்சனா, சாரதா ஆகியோருக்கும் விருது கொடுக்கப்பட்டது.

தமிழக அரசு இந்த விருதை 1954ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பல வருட இடைவெளிக்குப் பின்னர் இந்த விருது தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.