‘பன்னிகுட்டி’ படத்தில் நாயகனாக யோகிபாபு

ஒரு பன்றிக்குட்டியை கையில் தூக்கி அதை பாசத்துடன் கொஞ்சுகிறார் யோகி பாபு. விலங்குகளை மையமாக வைத்து நிறைய படங்கள் தயாராகி வருகின்றன. யானையை மையமாக வைத்து பிரபு சாலமன் இயக்கத்தில் ‘காடன்’, ஆரவ் நடிக்கும் ‘ராஜபீமா’ படங்கள் தயாராகி வருகின்றன. ஓவியா யானையுடன் நடித்த ‘ஓவியாவை விட்டா யாரு’ படம் வெளிவராமல் இருக்கிறது. ஒட்டகத்தை மையமாக வைத்து ‘பக்ரீத்’ படம் உருவாகிறது. குதிரையை மையமாக வைத்து ‘ஜிப்ஸி’ படமும் நாயை மையமாக வைத்து யோகிபாபு நடிக்கும் ‘கூர்கா’ படமும் தயாராகிறது. இந்நிலையில் ஒரு பன்றிக்குட்டியை மையமாக வைத்து ‘பன்னிகுட்டி’ படம் தயாராகிறது. இதில் யோகி பாபு, கருணாகரன் கதாநாயகனாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, டி.பி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர் உள்பட பலர் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அனுசரண் முருகையா இயக்குகிறார். கிருஷ்ணகுமார் இசை அமைக்கிறார், சதீஷ்முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். காணாமல்போன ஒரு விலைமதிப்பில்லாத பன்றிக்குட்டியைத் தேடிப்பிடிக்கும் கதை இது.