குடும்பமே ‘செல்ஃபி’யால் பிரச்சினை

கார்த்திக்கின் தந்தை சிவக்குமார் இரண்டு இடங்களில் ‘செல்ஃபி’ எடுத்தவர்களின் கைத்தொலைபேசியைத் தள்ளிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். அவரைப்போலவே அவருடைய மகன் கார்த்தியும் தற்பொழுது ‘செல்ஃபி’ பிரச்சினை ஒன்றில் மாட்டிக்கொண்டு வலைத்தளங்களில் அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். 
‘ஜுலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்றது. இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இசையை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, கார்த்தியைப் பேச அழைக்கும்போது, “ஒரு நிமிடம், உங்க அப்பா இங்கு இல்லை. அதனால் ஒரு ‘செல்ஃபி’ எடுத்துக் கொள்கிறேன்,” என்று கார்த்தியைத் தன் பக்கம் இழுத்தார். 
இதைச் சற்றும் எதிர்பார்க்காத கார்த்தி, கோபத்துடன் நகர்ந்து ஒலிபெருக்கியைப் பிடித்து, “புகைப்படம் எடுப்பது தேவை இல்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. ‘செல்ஃபி’ எடுப்பதற்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. மற்றவருடன் சேர்ந்து படம் எடுக்கும்போது அவரிடம் அனுமதி பெற்றே படம் எடுக்கவேண்டும். முகத்துக்கு முன்னாடி வந்து நிற்பது, முன்னாடி ஒரு ‘பிளாஷ்’, பின்னாடி ஒரு ‘பிளாஷ்’. அவ்வளவு வெளிச்சம் கண்ணில்பட்டால் ‘மைகிரேன்’ தலைவலி இருப்பவர்களுக்கு என்ன ஆகும்.  வருத்தமாக இருக்கிறது. இதுபற்றி பலர் கூடியிருக்கும் இந்த நிகழ்வில் சொன்னால்தான் உண்டு,” என்று கடுமையாக ஒலிபெருக்கியில் கண்டித்தார்.
கார்த்தி பேசி முடித்த பின் மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்த கஸ்தூரி, கார்த்தியின் கோபத்தைப் புரிந்துகொண்டு ஒருவழியாகப் பேசி “நான் செல்ஃபியே எடுக்கவில்லை,” என்று  சொல்லி சமாளித்தார். அவருடைய தந்தையின் ‘செல்ஃபி’ பிரச்சினையால்தான் கார்த்தி இவ்வாறு பேசியிருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.
கார்த்தி குடும்பமே ‘செல்ஃபி’க்கு எதிராக நிற்கும் வேளையில் அந்தக் குடும்பத்து உறுப்பினரான நடிகர் சூர்யா எடுத்த படத்தை இணைய தளவாசிகள் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
கார்த்தி ‘செல்ஃபி’ எடுப்பதைப் பற்றி மேடையில் கண்டித்த வேளையில் நடிகர் சூர்யா இயக்குநர் சந்திரசேகருடன் நின்று ‘செல்ஃபி’ படம் பிடித்திருக்கிறார். அது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு, “இந்தப் படத்தை நடிகர் சூர்யா நடிகர் விஜய்யின் பெற்றோரிடம் அனுமதி பெற்றுக்கொண்டா எடுத்திருப்பார்? அப்படி எடுத்திருப்பார் என்று நம்புவோம்,” என்று பதிவிட்டு வருகின்றனர்.