‘மக்கள் செல்வி’ பட்டத்தால் பிரிந்த அன்புத் தோழிகள்

‘டேனி’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருந்த வரலட்சுமிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தை படத்தின் இயக்குநர் சத்தியமூர்த்தி கொடுத்து இருந்தார். அத்துடன் படத்தின் விளம்பரங்கள், தலைப்பு ஆகியவற்றில் ‘மக்கள் செல்வி’ வரலட்சுமி என்றே வெளிவரும் என்றும் அறிவித்திருந்தார். இதே பட்டம் ‘சாவித்ரி’ படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரே‌ஷுக்கு முன்பே கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த விவகாரம் தற்பொழுது திரையுலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

தமிழ்த் திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கதாநாயகி மட்டுமில்லாமல் குணசித்திரம், வில்லி வேடங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். அண்மையில் அவர் தனது 34ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது இந்தப் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகியுள்ளது. அதில் ‘மக்கள் செல்வி’ வரலட்சுமி நடித்திருக்கும் ‘டேனி’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டுவிட்டரில் பலரும் குரல் எழுப்பியுள்ளனர். 

டுவிட்டரில் “பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து, தனது நடிப்புத் திறமையைக் கச்சிதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்த கீர்த்தி சுரே‌ஷுக்கு இந்தப் பட்டம் முன்பே வழங்கப்பட்டுவிட்டது. 
“தமிழ்த் திரையில் நயன்தாராதான் ‘லேடி சூப்பர் ஸ்டார்’. அதுபோல் ஒரேயொரு ‘மக்கள் செல்வி’தான். அது எங்கள் கீர்த்தி சுரேஷ்தான். அதனால் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்ட ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளனர்.   

இந்நிலையில் வரலட்சுமியும் கீர்த்தி சுரே‌ஷும் இருவரும் நெருங்கிய தோழிகள். இந்தப் பட்டம் வழங்கப்பட்டபோது ‘கீர்த்தி சுரே‌ஷுக்கு ஏற்கெனவே அந்தப் பட்டத்தை கொடுத்து விட்டார்கள் என்று ஏன் வரலட்சுமி அதை மறுக்கவில்லை?’ என்ற கேள்வியை தற்பொழுது கீர்த்தி சுரே‌ஷும் அவரைச் சேர்ந்த மற்றவர்களும் கேட்டு வருகின்றனர். இதனால் அன்புத் தோழிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றது கோலிவுட்.  
இதற்கிடையில் மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் ஒரு படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். ‘நடிகையர் திலகம்’ படத்தைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இருந்தாலும் அந்தப் படங்கள் அவரின் நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக அமையவில்லை. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமும்  ‘ரிலையன்ஸ்’ நிறுவனமும் சேர்ந்து தயாரிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தை நாகேஷ் என்ற இயக்குநர் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கான பணிகள் துவங்கியுள்ளதாகவும்  நட்சத்திரங்களின் தேர்வு தற்போது நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் மீண்டும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்