தொழில் அதிபராக சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் ‘என்.ஜி.கே.’, ‘காப்பான்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியிடத் தயாராக இருக்கின்றன. இந்நிலையில் சூர்யா, ‘ஏர் டெக்கன்’ கோபிநாத் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் நடிக்கின்றனர். மேலும் ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். 
படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் அறிவித்தனர். பின்னர் பட வேலைகள் முடியாததால் தள்ளிப் போனது.

இந்தப் படம் பற்றி சூர்யா  கூறும்போது, “செல்வராகவனுடன் சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்று நினைத்தேன். எனது படத்தில் என் இயக்குநர்கள், தயாரிப்பாளர் களை நான் முழுமையாக நம்புகிறேன். இந்தப் படத்தில் மக்களுக்குத் தேவையான செய்திகளைச் சொல்லி இருக்கிறோம். விரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது. உங்களுடைய எதிர்பார்ப்பை இந்தப் படம் நிறைவேற்றும்,” என்று கூறி யிருக்கிறார்.
‘என்.ஜி.கே’ யைத் தொடர்ந்து  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு கே.வி.ஆனந்துடன் சூர்யா இணையும் மூன்றாவது படம் ‘காப்பான்’. சூர்யாவுடன் ஆர்யா, மோகன்லால், சாயிஷா, பொம்மன் இரானி, சமுத்திரகனி, பிரேம் உள்பட பலர் நடிக்கிறார்கள். 
ஹாரிஸ் ஜெயராஜ் இசை, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு, பட்டுக்கோட்டை பிரபாகர் கதை, வசனம் எழுத, ஆண்டனி எடிட்டராக பணியாற்றுகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

கே.வி.ஆனந்த், தன் படங்களுக்குத் தூய தமிழில் தலைப்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டவர். அதுவும் அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ் வார்த்தையாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ ஆகியவை சில உதாரணங்கள். 
இந்தப் படத்திற்கு ‘காப்பான்’ என்று தலைப்பு வைத்துள்ளார். ‘காப்பான்’ என்றால் காக்கின்றவன், பாதுகாப்பவன் என்று பொருள். 2019-03-14 06:10:00 +0800