ரசிகர்களின் உயிரை காப்பாற்றிய விஜய்

விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் நேற்று முதல் நயன்தாராவும் இணைந்துள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்படைந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் கிளம்பும்போது அவரை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பதாக அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதனையடுத்து அங்கு சென்ற விஜய், இடையில் இருந்த ஒரு சின்ன கால்வாயைத் தாண்டி ரசிகர்களுக்கு அருகில் சென்று அவர்களுக்கு வணக்கம் சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களின் ஆர்வமிகுதியால் அங்கு பாதுகாப்பிற்கு போடப்பட்டிருந்த தடுப்பு திடீரென சரிந்தது. இதனைப் பார்த்த விஜய், சற்றும் யோசிக்காமல் அந்த தடுப்பைப் பிடித்து ரசிகர்களுக்குக் காயம் ஏற்படாமல் தடுத்தார். உடனே அங்கிருந்த மற்றவர்களும் தடுப்பு விழாமல் இருக்க விஜய்யுடன் சேர்ந்து தாங்கிப் பிடித்தனர். இதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.