நடிகை நயன்தாராவை புண்படும் சொற்களால் விமர்சித்த நடிகர் ராதாரவியை தனது கட்சியிலிருந்து நீக்க திராவிடர் முன்னேற்ற கழகத் தலைவர் எடுத்த முடிவை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
மேற்கு வங்காளத்திற்குச் சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் அதற்கு முன்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். நயன்தாராவை மரியாதையுடன் நடத்தவேண்டிய முதல் கடமை சக நடிகர்களுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார். கலைஞராக இருந்துகொண்டு ராதாரவி இப்படி செய்வது வருத்தத்திற்குரியது என்று கூறிய கமல், அவரைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ள திமுகவைப் பாராட்டியுள்ளார்.
வரும் இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிடும் கமல், தனது கட்சியின் வேட்பாளர்களை அனைவரும் அறியச் செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைச் சந்திக்கப்போவதாகக் கூறிய கமல், தமிழகத்திற்கு மீண்டும் திரும்பும்போது அதற்கான காரணத்தைத் தெரிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.

