ஒரே நேரத்தில் நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் முத்திரை பதிக்க தயாராகி வருகிறார் அமலாபால். 'ராட்சசன்' படத்திற்குப் பிறகு அமலா பால் நடிப்பில் அதோ அந்தப் பறவை போல, ஆடை மற்றும் சில மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ்ச் சினிமாவில் முன்னணி நாயகியான அமலா பால் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `கடவர்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தில் அமலா பால், தடயவியல் மருத்துவ நிபுணராக நடிக்கிறார். அதுல்யா, ஹரிஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட 'ஒரு காவல்துறை சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை திரைக்கதையில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களைச் செய்துள்ளதுடன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத் தொகுப் பையும் கவனிக்கின்றனர். ராகுல் கருப்பையா கலைப் பணிகளையும், விக்கி சண்டைப்பயிற்சியையும் மேற்கொள்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் அமலா பால் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கிறார். ஏபிஜே ஃபிலிம்ஸ் சார்பில் அஜய் பணிக்கர், ஒயிட் ஸ்கிரீன் பிரதீப்புடன் இணைந்து அமலா பாலும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத் தொடர்ந்து படங்களைத் தயாரிப்பது பற்றி முடிவு செய்வதாக அமலா பால் கூறியுள்ளார்.
தயாரிப்பில் தடம் பதிக்கிறார்
2 mins read
-

