படம் வெற்றியோ தோல்வியோ வரவேண்டிய சம்பளத்தை ஒட்டுமொத்தமாகக் கறந்துவிட்டு மறுவேலை பார்ப்பதுதான் நடிகர், நடிகைகளின் வாடிக்கை. அதிலும் நடிகர்களைவிட நடிகைகள் இதில் முதல் இடம்.
ஷர்வானந்த், சாய் பல்லவி நடிப்பில் பல கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டு இறுதியில் வெளியான தெலுங்குப் படம் 'படி படி லேச்சே மனசு'. இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் தயாரிப்பாளருக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம்.
படம் வெளியான முதல் நாளே படுதோல்வி என்று அறிவிக்கப்பட்டு ரூ.22 கோடிக்கு வியாபாரமான இந்தப் படம் ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்தது. படத்தின் கதாநாயகி சாய் பல்லவிக்கு ஒப்பந்தத்தில் சொன்ன சம்பளத்தில் ஒரு பகுதியை முதலில் கொடுத்த தயாரிப்பாளர் மீதமுள்ள ரூ.25 லட்சத்தை பட வெளியீட்டுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் படம் தோல்வியடைந்தாலும் சாய் பல்லவியின் மீதிச் சம்பளத்தைத் தர அவர் முன்வந்தார். ஆனால் தற்போதைய நிலைமையில் தன்னால் அந்தத் தொகையைப் பெற்றுகொள்ள முடியாது. வசூலில் நஷ்டம் ஏற்பட்டதில் தானும் பொறுப்பேற்பதாக சாய் பல்லவி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அடுத்த முயற்சியாக இந்தப் பணத்தை சாய் பல்லவியின் பெற்றோரிடம் தர தயாரிப்பாளர் முயன்றுள்ளார். அவர்களும் அதை வாங்க மறுத்துள்ளார்கள்.
சாய் பல்லவியின் இந்தச் செயலால் நெகிழ்ந்த தயாரிப்பாளர், "சினிமாவில் இப்படிப்பட்ட அபூர்வமான மனுஷிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். என் கஷ்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட அவரை என்னுடைய அடுத்த படத்தில் மீண்டும் நாயகியாக்க முடிவெடுத்து இருக்கிறேன்.
"அதனால் அந்தப் பணத்தை அவரது அடுத்தப் படத்திற்கான அட்வான்சாக வைத்துக்கொள்ளச் சொல்லி இருக்கிறேன்," என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர். அந்தப் படத்தில் நடிகர் ராணா நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதிவை இணையத்தில் பார்த்த சாய் பல்லவி "நான் ரகசியமாகச் செய்தது இப்படி வெளியாகிவிட்டதே," என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை சாய் பல்லவி போல் மற்ற நடிகர், நடிகைகளும் புரிந்துகொண்டால் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகிறது கோலிவுட்.

