கவலையில் ரௌடி பேபி

கவலையில் ரௌடி பேபி

3 mins read
eae92ae0-3978-4272-a0e1-e96f984e0f7e
-

சாய் பல்லவி தமிழில் நடித்து வெளிவந்த படம் 'மாரி 2'. இந்தப் படம் வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கான ரசிகர்களின் கூட்டம் குறைந்தபாடில்லை. அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, "என்னிடம் மருத்துவம் பார்க்க யாரும் வரமாட்டார்கள். என்னுடன் சேர்ந்து படம் எடுக்க மட்டும் நோயாளிகள் வருவார்கள்," என்று கவலை தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, "நான் இப்போது மருத்துவம் செய்ய மருத்துவமனைக்குச் செல்வதில்லை. என்னிடம் இருந்த சில திறமைகள் இப்போது என்னை விட்டுப் போவதை உணர்கிறேன்.

"நான் இப்போது மருத்துவ மனைக்குச் சென்றால் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார் களே தவிர என்னிடம் மருத்துவம் பார்க்க யாரும் வரமாட்டார்கள். அது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது," என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 'என்ஜிகே' படத்தின் இசை, முன்னோட்டக் காட்சி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதற்காக சென்னையில் நடைபெற்ற விழாவில் சூர்யா, செல்வராகவன், சாய் பல்லவி, யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சூர்யா, "சாய் பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். அதிகமாக 'டேக்' வாங்குகிறேனே என நினைத்து அழுவார்.

"ஏதாவது ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றாலும் அழுவார். இன்னொரு 'டேக்' கொடுங்கள் என்று கெஞ்சி தேம்பித் தேம்பி அழுவார். அப்போது செல்வராகவன்தான் அவரை ஆறுதல் கூறி தேற்றுவார். இப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகையைப் பார்ப்பது கஷ்டம். அவரது இந்த உழைப்பும், அர்ப்பணிப்பும்தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது", என்று சூர்யா மேடையில் அவரைப் பாராட்டிப் பேசினார். இந்தப் படம் மே 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இவர் மலையாளத்தில் அறிமுகமா னாலும் தெலுங்கில்தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம் இவர் தெலுங்கில் நடித்த 'ஃபிடா', 'மிடில் கிளாஸ் அப்பாயி' (MCA),

'படி படி லேசே மனசு' போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து தெலுங்கு நடிகர்களின் மனதை ஏகத்துக்கு கொள்ளையடித்து வைத்திருக்கிறார்.

சாய் பல்லவியின் வெற்றிக்குக் காரணம் அவரது அழகல்ல, திறமையே! அதிகமான ஒப்பனையோ அனாவசியமான நடிப்போ, கவர்ச்சியோ எதுவுமின்றி கதைக்கு வேண்டிய விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்த வித்தைதான் சாய் பல்லவியின் வெற்றிக்கு நூறு விழுக்காடு காரணம்.

அடுத்ததாக ராணா டகுபதியுடன் சாய் பல்லவி நடிக்கவிருக்கும் படம் 'விராடப் பர்வம் 1992'. இந்தப் படத்தில் சாய் பல்லவிக்குச் சுத்தமாக ஒப்பனையே கிடையாது. இப்படியொரு வேடத்தை ஒப்புக்கொள்ள வேறு எந்த நடிகையும் தயங்குவார்கள். ஆனால் சாய் பல்லவி மட்டும் அதற்கு உடனே ஒத்துக்கொண்டு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஒப்பனை இல்லாமல் நடிக்கும் தைரியம் எப்படி வந்தது? என்று கேட்டதற்கு, "எல்லாம் என் நடிப்பு மீது நான் கொண்டுள்ள நம்பிக்கைதான்," என்றார் சாய் பல்லவி.

படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் முழுதாக வெளியிடப்படவில்லை. எனினும் கூடிய விரைவில் தகவல்கள் வரலாம்.

'டோலிவுட்'டில் தற்போது இளம் நடிகர்கள் அனைவரும் ஒருமுறையேனும் இணைந்து நடித்துவிட துடிக்கும் இளம் நடிகைகளில் சாய் பல்லவி முதன்மையானவர் என்று சொல்லப்படுகிறது. தற்போது தெலுங்கு தவிர தமிழ், மலையாளத்திலும் கூட அடுத்தடுத்த தொடர்ந்து நடித்து வருகிறார் 'ரௌடி பேபி' என்று சொல்லமாக அழைக்கப்படும் சாய் பல்லவி.