மனம் திறந்த யோகி பாபு

மனம் திறந்த யோகி பாபு

2 mins read
9f114cb1-4a7b-4b90-a5f8-d36f19c3ac33
-

திரைத்துறையில் திடீரென யார் உச்சத்தைப் பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. உண்மையான உழைப்பும் அதிர்ஷ்டமும் இருப்பவர் களைத்தான் ஒரு நாள் உச்சத்தில் ஏற்றி வைத்து திரைத்துறை அழகு பார்க்கும். அந்த உச்சத்தைத் தொட்டவர்களில் யோகி பாபுவும் ஒருவர்.

இவர் நாயகனாக நடித்த 'தர்ம பிரபு' படத்தின் இசை வெளியீட்டு விழா மே 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. யோகி பாபுவுடன் பல ஆண்டுகளாக ஒரே அறையில் தங்கியிருந்த முத்துக்குமரன்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் முத்துக்குமரன், "யோகி பாபு தொலைக்காட்சியில் நடித்து வாங்கி வரும் 300 ரூபாய்க்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். அதை வைத்துத்தான் நாங்கள் சாப்பிடு வோம். அன்று முதல் இன்று வரை அவர் பாபுவாக அப்படியே இருக்கிறார்," என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். அதைக் கேட்டு யோகி பாபுவும் கண் கலங்கினார்.

ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம் வாங்கியவர் இன்று ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை வாங்குவதுதான் யோகி பாபுவின் வளர்ச்சி.

விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும் போது, யோகிபாபு ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்பதாக குறிப்பிட்டார்.

அதைக்கேட்டு வேதனையடைந்த யோகிபாபு, "உங்கள் கம்பெனியிலேயே இரண்டு படங்களில் நடித்து இருக்கிறேன். எனக்கு ஒரு நாளைக்கு 15 லட்சம் சம்பளம் கொடுத்தீர்களா என்று கேட்டவர், 'ஜிஎஸ்டி' சான்றிதழ் தராமல் அவர் இழுத்தடித்ததையும் நாசூக்காக சபையில் சொல்லி விட்டார். அதனால் ஞானவேல் ராஜா அவமானத்தில் தலைகுனிந்தார்.

மேலும் அவர் பேசியபோது, "நான் விஜய் தொலைக்காட்சியின் 'லொள்ளு சபா'வில் நடித்துவிட்டு 300 ரூபாய் வாங்கி வருவேன். அதைத்தான் முத்துக்குமரன் அப்படி சொன்னார். நான் அதிக சம்பளம் கேட்பதாகக் கூறுகிறார்கள். அப்படி யில்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவன் நான். அண்மையில் ஒரு புதுமுக இயக்குநர் அவர் படத்தில் நடிக்கக் கேட்டார். உடனே அவரது தயாரிப்பாளரிடம் சொல்லி சம்பளத்தை பாதியாகக் குறைத்துக் கொண்டேன்," என்று மனம் திறந்து பேசினார் மக்களின் அன்பைப் பெற்ற யோகி பாபு.