திகில் படங்களில் தமன்னா

திகில் படங்களில் தமன்னா

2 mins read
4e0f3ac1-6895-49bd-8e9f-3865d76e4735
தமன்னா -

நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்பொழுது தமன்னாவும் இணைந்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கலந்த புதிய திகில் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

'அதே கண்கள்' படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன், இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, "தமன்னா தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கும் நோக்கில், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படுகின்ற திரைப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். முதன்முதலாக அவர் திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடிக்க இருக்கிறார். தமன்னா ஒரு சவாலான கதாபாத்திரத்தில் திகிலாக வலம் வருகிறார்.

"அவருடன் யோகி பாபு, முனீஸ்காந்த், சத்தியன், காளி வெங்கட், `சின்னத்திரை' புகழ் டி.எஸ்.கே. ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுதுகிறார். 'ஈகிள்ஸ் ஐ புரொடக்‌ஷன்ஸ்' சார்பில் படம் தயாராகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கும். அதுபோல் தமன்னாவுக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை அவர் நண்பர்களுடன் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்? என்பது இந்தப் படத்தின் கதை. படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. தொடர்ந்து காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது," என்றார்.

இதற்கிடையில் மேலும் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தமன்னா. சக்ரி டாலட்டி இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காமோ‌ஷி'. இது 'தேவி 2' படத்தைப் போன்று திகில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தமன்னா காது கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார். இதன் விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.