தடைகளைத் தாண்டியது மோடி படம்

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி யின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தடைகளைத் தாண்டி நேற்று இந்தியா வில் வெளியிடப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கைக் கதை, ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஓமங்க் குமார் இயக்கியுள்ளார். இவர் ‘மேரி கோம்’, ‘சர்ப்ஜித்’ ஆகியவர்களின் வாழ்க்கையைப் படங்களாக இயக்கி யவர். 

இந்தப் படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். இவர் தமிழில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

‘இந்தப் படம் மக்களவைத் தேர்தலைக் குறி வைத்து எடுக்கப் பட்டதாகவும் தேர்தல் ஆதாயத்துக்காக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது,’ என்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது.

அதையடுத்து ‘மின்னணு ஊடகங் களில் எந்தக் கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எந்தவித ஒலிபரப்பு களையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நெறிமுறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் படத்தை வெளியிடத் தடை விதித்தது. 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்புத் தரப்பில் வழக்குத் தொடரப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்  “இந்தப் படத்தைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டுத் தேர்தல் நேரத்தில் வெளியிடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்,” என்று உத்தரவிட்டது.

படத்தை பார்த்த தேர்தல் ஆணையம், அதை இப்போது வெளியிடக்கூடாது எனக் குறிப்பிட்டு அறிக்கையாக கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிடத் தடை விதித்தது.

இதையடுத்துத் தேர்தல் முடிந்த பின், 24 ஆம் தேதி படத்தை வெளியிடத் தயாரிப்புத் தரப்பு முடிவு செய்திருந்தது. அதன்படி, தடைகளைத் தாண்டி நேற்று அந்தப் படம் இந்தியா முழுவதும் வெளியீடு கண்டது.

அதுபற்றி மோடியாக நடித்த விவேக் ஓபராய் கூறும்போது, “மே 23 அன்று மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவார். அடுத்த நாளன்று ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாகும்,” என்று முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 

அதுபோலவே அவர் வெற்றி பெற்றதும், “நேற்று டெல்லியிலும் மும்பையிலும் இந்தப் படம் சிறப்புக் காட்சிகளாகத் திரையிடப்பட்டபோது ரசிகர்கள் அதிகளவில் ஆதரவு தந்தனர். மோடிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார் விவேக் ஓபராய்.