'என்.ஜி.கே.' படத்தில் நடித்தபோது சாய் பல்லவிக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகச் செய்திகள் வெளி வந்தன.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள 'என்.ஜி.கே.' படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இரண்டு நாயகி களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
தன்னைவிடச் சாய் பல்லவியின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் உள்ளதாக நினைத்து ரகுல் கோபம் அடைந்தார் என்று தகவல்கள் வெளியாயின.
இது பற்றி ரகுல் கூறுகையில், "எனக்கும் சாய் பல்லவிக்கும் இடையே சண்டை எதுவும் இல்லை. நாங்கள் சண்டை போட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இருவருக்குமே முக்கியமான கதாபாத்திரங்கள்தான். என்னுடைய கதாபாத்திரம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது," என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஒரு படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடித்தாலே பிரச்சினைதான் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுவார்கள். சாய் பல்லவி எப்படி நடிப்பார், ரகுல் எப்படி நடிப்பார் என்று தெரிந்து அதற்கு ஏற்றாற்போல நிச்சயம் நல்ல கதாபாத்திரங்களாகக் கொடுத்திருப்பார் செல்வராகவன் என்று நம்பலாம்.

