இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் பாடுவதாக அறிவிக்கப்பட்டதால் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அனுமதிச்சீட்டுகள் விற்பனையாயின. ஆனால் நிகழ்ச்சியின்போது குறைந்த கட்டண அனுமதிச்சீட்டு வாங்கியவர்கள் அதிகக் கட்டணம் வாங்கியவர்கள் அமரும் இடங்களில் அமர்ந்தனர்.
அதனால் அதிகமாகக் கட்டணம் செலுத்தியவர்கள் உட்கார இடம் இல்லாமல் இசை நிகழ்ச்சியின்போது சலசலப்பு ஏற்பட்டது. அதனால் கோபமடைந்த இளையராஜா, "என் இசையால் தான் நீங்கள் வாழ்கிறீர்கள். உங்களுக்காகத்தான் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் நின்று நான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன். ஆனால் உங்களில் சிலர் செய்யும் செயல்கள் எனக்கு வேதனை அளிக்கிறது. நீங்கள் இப்படி அனுமதிச்சீட்டு மாறி அமர்ந்தால் அதிக கட்டணம் செலுத்தியவர்கள் என்ன செய்வார்கள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? உங்களுக்கான இடங்களில் அமர்ந்து இசையைக் கேட்டு மகிழுங்கள்," என்று கோபமாகவும் வேதனையுடனும் பேசினார்.

