தவறான பேச்சுக்காக மன்னிப்பு  கேட்ட நயன்தாராவின் காதலர்

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘கொலையுதிர் காலம்’ படத்தைப் பற்றி தாறுமாறாக பேசி இருந்தார். அதைத் தற்பொழுது மீட்டுக்கொண்டுள்ளார்.

‘கொலையுதிர் காலம்’ படத்தை விளம்பரப்படுத்தும் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விஷயத்தில் நயன்தாராவே அமைதி காத்திருந்த வேளையில் அவருடைய காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், “கொலையுதிர் காலம்’ படக்குழுவினர் களைத் தனது டுவிட்டரில் “இன்னும் படப்பிடிப்பே முடியவில்லை. பாதியிலேயே நிற்கப்போகும் படத்திற்கு ஏன் ‘புரமோஷன்’ விழா?” என்று அவர் கூறியது இந்தப் படத்தின் வியாபாரத்தைப் பெரிய அளவில் பாதித்ததாகவும் அதனால் விக்னேஷ் சிவன் மீது தயாரிப்பாளர் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் நயன்தாரா தலையிட்டுத் தயாரிப்பாளரை சமாதானம் செய்ததால் இந்த விஷயம் அடங்கியது.

படம் 14ஆம் தேதி வெளியீடு காணும் என்று அறிவிப்பு வந்ததும் படக்குழுவினர் களுக்கு விக்னேஷ் சிவன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அத்துடன் “படத்தைத் தான் பார்த்ததாகவும் நயன்தாரா உள்பட படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும் தான் முன்பு சொன்ன சில சர்ச்சை கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோருவ தாகவும் இந்தப் படம் வெற்றியடைய தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக வும்,” விக்னேஷ் பதிவிட்டிருந்தார். 

இதற்கிடையே ‘கொலையுதிர் காலம்’ என்பது தன்னுடைய தலைப்பு என்று கூறியும் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘கொலையுதிர் காலம்’ நாவலை அவருடைய மனைவி யிடமிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உரிமை பெற்றிருக்கிறேன் என்றும் பாலாஜி குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

அந்த வழக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘கொலையுதிர் காலம்’ படத்தை வெளியிடத்தடை விதித்துள்ளது.

கைவிடப்பட்டது என்று சொன்ன படம் வெளியாகப் போகிறதே என்று நினைத்தபோது தலைப்பு பிரச்சினை யால் தடை வந்துள்ளது. பிரச்சினை தீர்ந்து படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகுமா என்பதை பொறுத் திருந்து பார்ப்போம்.