ஜப்பானில் முகாமிட்டுள்ள பார்வதி

ஜப்பானில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் ஆனந்தமாக அனுபவித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை பார்வதி நாயர்.

இவரை கடந்த சில மாதங்களாக கோடம்பாக்கம் பக்கம் அறவே காண முடியவில்லை. கடைசியாக ‘சீதக்காதி’ படத்தில் நடித்திருந்தார். 

அதன் பிறகு தமிழில் சரிவர வாய்ப்புகள் அமையவில்லையாம். அதனால் பிற மொழிகளில் கவனம் செலுத்துவதாகச் சொல்கிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக ஜப்பானில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் பார்வதி. ஜப்பானின் பல்வேறு நகரங்களில் எடுக்கப்பட்ட படங்கள் அசத்தலாக உள்ளன.

எதற்காக இந்தத் திடீர்ப் பயணம் என்பதற்கு தமது பதிவின் மூலம் பதிலளித்துள்ளார் பார்வதி. அவர் அங்கு நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.

படப்பிடிப்பு என்றதும் ஏதோ திரைப்படத்துக்கு என்று நினைக்க வேண்டாம். விளம்பரப் படத்துக்காகவே சென்றுள்ளார்.

இதுதான் விஷயம். ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல விமான நிறுவனத்துக்காக பெரும் பொருட்செலவில் விளம்பரங்களை உருவாக்கி வருகின்றனர். அதில் நடிக்கவே பார்வதி அங்கு முகாமிட்டுள்ளார்.

“இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு நடிகர், நடிகையும் இந்த விளம்பரத்தில் இதற்கு முன்பு நடித்ததில்லை. நான்தான் முதல் நபராக நடிக்கிறேன் என்பது மகிழ்ச்சி தருகிறது. 

விமான நிறுவனம், சுற்றுலா சம்பந்தப்பட்ட விளம்பரம் என்பதால் அதில் நடிப்பதில் எந்தவித சிரமமும் இல்லை. சொல்லப்போனால், படப்பிடிப்பு ரொம்ப ஜாலியாக நடக்கிறது. அதனால் விடுமுறைக்கு வந்தது போலவே உணர்கிறேன்,” என்கிறார் பார்வதி.

ஜப்பானில் இந்தியர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகள் கிடைக்காது. ரொம்ப காரமாக இருக்கும் என்றெல்லாம் நண்பர்கள் சிலர் இவரைப் பயமுறுத்தினராம். ஆனால் அவை அனைத்துமே தவறான தகவல்கள் என்பதை இப்போது கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கி றார்.

“உணவைப் பொறுத்தவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. உண்மையைச் சொல்வதானால் எனக்குப் பிடித்தமான அனைத்தும் இங்கு கிடைக்கின்றன. அதே போல் இங்கு கிடைக்கும் அனைத்தும் எனக்குப் பிடித்திருக்கின்றன. எந்த உண விலும் தேவையற்ற காரம், இனிப்பு இல்லை,” என்று சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தோக்கியோ நகரில் உள்ள முக்கிய மான இடங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டார். தாம் சென்று வந்த இடங்கள், அவற்றின் சிறப்புகள் குறித் தும் பதிவிடத் தவறவில்லை.

இவர் தமது பதிவுடன் இணைத் துள்ள புகைப்படங்கள் மிக நேர்த்தியாக இருப்பதாவும் பார்வதி அழகாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டும் ரசிகர்கள் பலர் பின்னூட்டம் இட்டுள்ளனர். இதனால் உற்சாகத்தில் உள்ளார் பார்வதி.

தமிழில் தொடர்ந்து நடிப்பீர்களா?

“குறிப்பிட்ட மொழியில்தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிடவில்லை. வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பேன். விளம்பர வாய்ப்புகள் தேடி வருவது உற்சாகம் அளிக்கிறது.

“இனி விளம்பரங்களிலும் கூடுதல் கவ னம் செலுத்தப்போகிறேன்,” என்கிறார் பார்வதி நாயர்.