சாதனை விலைக்கு விற்கப்பட்டபிரபாசின் 'சாஹோ'

சாதனை விலைக்கு விற்கப்பட்டபிரபாசின் 'சாஹோ'

2 mins read
4fcf512f-baa7-40e2-9ab9-b0b95012bada
-

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்திய அளவில் 'ஸ்டார்' ஆக உயர்ந்து நிற்பவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் தற்போது 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். படத்தை ஆரம்பிக்கும்போதே இந்தி ரசிகர்களையும் மனதில் வைத்து ஆரம்பித்தார்கள்.

'பாகுபலி' படங்களில் இந்தி நடிகர்கள் இல்லாததை அப்போது ஒரு குறையாகச் சொன்னார்கள். அவர்கள் இல்லாமலேயே இப்படி வசூலைக் குவித்த 'பாகுபலி' படத்தில் இந்தி நடிகர்களும் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு வசூலித்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதை மனதில் வைத்துதான் படத்தின் நாயகியாக இந்தி நடிகையான ஷ்ரத்தா கபூரை படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார்கள். இப்போது 'சாஹோ' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளிவந்த பிறகு அதற்குக் கிடைத்த வரவேற்பு அவர்களின் முடிவை சரியாக்கிவிட்டது. படத்தில் ஷ்ரத்தா கபூரைப் பற்றியும் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இதனால், இந்தியிலும் படத்தை நல்ல விலைக்கு விற்க முடியும் என்ற நம்பிக்கை படத் தயாரிப்பாளருக்கு வந்துள்ளது.

தெலுங்கில் இப்படத்திற்கான வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது. தெலுங்கானா, ஆந்திர மாநில உரிமை மட்டும் சுமார் 115 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் அந்த மாநிலங்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூலைத் தந்தது. அதை மனதில் வைத்து 'சாஹோ' விலையை 115 கோடிக்கு விற்றுள்ளார்கள் என்கிறார்கள். முன்னோட்டக் காட்சி வெளியானபின் படம் மீதான எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளதால் இந்த விலை சாத்தியமாகி உள்ளதாகத் தெரிகிறது.

'பாகுபலி' படங்களைப்போலவே 'சாஹோ'வும் சாதனை படைக்கும் என்று இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.