'கரகாட்டக்காரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் அதன் இயக்குநர் கங்கை அமரன்.
ஆனால் இத்தகைய முயற்சி வீண் வேலை என்று தெரிவித்துள்ளார் அப்படத்தின் நாயகன் ராமராஜன். பெரிய அளவில் வெற்றி பெற்ற படைப்புகளுக்கு இரண்டாம் பாகம் தேவையில்லை என்பதே தனது கருத்து என்கிறார்.
"கங்கை அமரன் என்னையும் தொடர்புகொண்டு பேசினார். ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. சில விஷயங்களை மீண்டும் தொடக்கூடாது. அப்படி தொட்டால் சரிபட்டு வராது. முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு உள்ளது என்றால், அவை அனைத்தும் வெவ்வெறு பெயர்களில்தான் உள்ளன. 'பழனி-1', 'பழனி-2' என்று அமையவில்லை. அப்படிப்பட்டதுதான் ஒரு படத்தின் இரண்டாம் பாகம்," என்கிறார் ராமராஜன்.
இரண்டாம் பாகம் ஐநூறு நாட்கள் ஓடும் என்று உறுதியளிக்கப்பட் டாலும் கூட அதில் தம்மால் நடிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இரண்டாம் பாகம் என்ற யோசனையைக் கைவிடுவதே நல்லது என்று கூறியுள்ளார்.