விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள மாணவிக்கு நிதி உதவி அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உதய கீர்த்திகா என்ற அம்மாணவி அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். சிறு வயது முதலே விண்வெளித் துறையில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் சிலரைத் தேர்வு செய்து விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும் என்பதே உதய கீர்த்திகாவின் தற்போதைய லட்சியம். இதற்காக விமானப் பராமரிப்பு துறை சார்ந்த பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். உக்ரேனில் இந்தப் படிப்பை முடித்த கையோடு போலந்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் சேரவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனினும் இதற்கு 8 லட்ச ரூபாய் தேவைப்பட்டதாம். இதுகுறித்து தனது ரசிகர் மன்றம் மூலம் விஜய் சேதுபதிக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து உடனடியாக ரசிகர் மன்றம் மூலமாகவே இத்தொகையை அம்மாணவிக்கு வழங்கியுள்ளார் சேதுபதி.
படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் சந்திக்க முடியவில்லை என்று கைபேசி வழி உதயகீர்த்திகாவிடம் பேசியபோது விவரம் தெரிவித்து வாழ்த்தும் கூறியுள்ளார் சேதுபதி.

