ராணி முகர்ஜி: குழந்தையைப் பாதுகாப்பதில் எப்போதும் எச்சரிக்கை தேவை

ராணி முகர்ஜி: குழந்தையைப் பாதுகாப்பதில் எப்போதும் எச்சரிக்கை தேவை

2 mins read
f0c2e0f2-adf0-422c-b0fd-64522cc86c7a
இந்தி நடிகை ராணி முகர்ஜி -

இன்றைய நவீன உலகில் பெற்றோர்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதும் அவர்களை உன்னிப்பாகக் கவனித்து பல விஷயங்களைக் கற்றுக்கொடுப்பதும் மிக அவசியம் என்று பிரபல இந்தி நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

எல்லோரும் கண்களையும் காதுகளையும் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் அகல திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணி நடித்து வெளியான 'இச்கி' இந்திப் படம் அவருக்கு பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இதையடுத்து குழந்தைகளின் நலனையும் பாதுகாப்பையும் வலியுறுத்தும் வகையில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கெனவே இவர் நடித்த 'மருதாணி' என்ற படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இது குறித்த சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

"ரசிகர்களைக் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகின்ற ஒரு விஷயம் குறித்து 'மருதாணி' இரண்டில் நாங்கள் பேச இருக்கிறோம். இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் முக்கிய செய்தியைச் சொல்லும் படம்.

"நிஜத்தில் மிகவும் யதார்த்தமான, அதேசமயம் அச்சுறுத்துகின்ற உணர்வைத் தரும் ஒரு விஷயத்தை இத்திரைப்படம் பார்வையாளர்களுக்குத் தரும். நமது வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியுள்ள பிறரது வாழ்க்கையிலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்தப் படம் தெளிவாகப் புரிய வைக்கும்," என்கிறார் ராணி முகர்ஜி.

'டூ ரெட்' என்ற நோய் குறித்து பல முக்கிய விஷயங்களையும் இந்தப் படம் புரிய வைக்கு மாம். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு இந்த நோய் குறித்து அறவே எதுவும் தெரியாது என்றும் சுட்டிக் காட்டுகிறார்.

'இச்கி' திரைப்படம் மிக விரைவில் தமிழிலும் மொழிமாற்றம் அல்லது மறுபதிப்பு செய்யப்படும் என்று நம்புவதாகச் சொல்லும் ராணி, தற்போது தனது இதயத்தை ஈர்க்கின்ற ஒரு நடிகையாக தன்னைக் கவரக்கூடிய திரைக்கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறாராம். தன்னைத் தேடி வரும் கதைகளில் இருந்து மிகச்சிறப்பானவற்றை மட்டும் தம்மால் தேர்வு செய்ய முடிவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.

"ரசிகர்கள் எனக்களிக்கும் ஆதரவு என் மனதில் நன்றி உணர்வை விதைத்திருக்கிறது. நான் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு மிகப் பொருத்­த­மானவராக மாற்றுவது இயக்குநர்களும் கதாசிரியர்களும்தான்.

"அவர்களுடைய நட்பு கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டம் என்பேன். சரியான நேரத்தில் சரியான திரைக்கதை கிடைப்பது எனது அதிர்ஷ்டம்," என்கிறார் ராணி முகர்ஜி.

கொசுறு: இதற்கிடையே தமிழ்த் திரையுலகில் பிரபலமாக உள்ள ஓர் இயக்குநர் ராணி முகர்ஜியை வைத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.