ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இவற்றுள் வெற்றிமாறன் இயக்கத் தில் உருவாகி வரும் 'அசுரன்' படம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஜி.வி.பிரகாஷ், இசையமைக்க, 'பொல்லாத பூமி' எனும் பாடலை தனுஷ் பாடியுள்ளாராம். நடிகர் பசுபதியும் இயக்குநர் பாலாஜி சக்தி வேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எல்லாப் பணிகளும் திட்டமிட்டபடி நடந்தேறும் பட்சத்தில் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பழிவாங்கும் கதையைக் களமாகக் கொண்டு உருவாகும் படம். தந்தையைக் கொன்றவர்களை மகன் துரத்தித் துரத்திப் பழிவாங்குகிறார். கதைப்படி தினக்கூலியாக, அநீதியைக் கண்டு ஆவேசம் அடையக் கூடிய கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வழங்குகிறாராம் தனுஷ். இது 'வெக்கை' எனும் நாவலைத் தழுவி உருவாக்கப்படுகிறது. மகன் வேடத்துக்காக தன் மீசையை இழக்க உள்ளார் தனுஷ்.
இதற்கிடையே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் இரட்டை வேடங்களை ஏற்றுள்ளார் தனுஷ். இதில் மெகரின் திரிசாடா, சினேகா ஆகிய இருவரும் நாயகிகளாக ஒப்பந்தமாகி உள்ளனர். துரை செந்தில் குமார் இயக்கும் படம் இது.ஏற்கெனவே முதற்கட்ட படப் பிடிப்பை முடித்துள்ள நிலையில், 'அசுரன்' பட வேலைகள் முடிந்து விட்டதால் அடுத்தகட்ட படப்பிடிப்பைத் துவங்க திட்டமிட்டுள்ளார் துரை செந்தில்குமார். இவர் 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'நோட்டா' ஆகிய படங்களை இயக்கியவர். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் தந்தை, மகனாக நடிக்கிறாராம் தனுஷ். தந்தை வேடத்துக்குத்தான் சினேகாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.

