நடிகர்களாகக் கொடிகட்டிப் பறந்து பின்னர் தயாரிப்பாளராகி அதல பாதாளத்தில் விழுந்தவர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ஆயினும் சிவகார்த்திகேயன் விவரமறிந்துதான் செயல்படுகிறார் என்பது சிலரின் அனுமானம். 'விஜய்' தொலைக்காட்சி தொகுப்பாளராகத் தொடங்கி திரைப்பட கதாநாயகனாக மாறிய சிவகார்த்திகேயன், இதுவரை தனது தயாரிப்பில் இரண்டு படங்களை வெளியிட்டார். 'கனா' என்ற அவரது முதல் படம் நல்ல வசூலைப் பெற்றதை அடுத்து 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா' என்ற படத்தை வெளியிட்டார். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை.
இம்முறை சிவகார்த்திகேயன், தனது தம்பியும் 'அருவி' திரைப்படத்தின் இயக்குநருமான அருண் பிரபு புருஷோத்தமனின் இயக்கத்தில் 'வாழ்' என்ற படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் 'முதல் பார்வை' சுவரொட்டியை இன்று டுவிட்டரில் வெளியிட்ட சிவகார்த்திகேயன்,
இன்று மறைந்த தமது தந்தையின் பிறந்தநாள் என்றும் அவரது ஆசியுடன் சுவரொட்டியை வெளியிடுவதாகவும் கூறினார். சிவகார்த்திகேயனின் உருக்கமானப் பதிவைப் படித்து நெகிழ்ந்த இணையவாசிகள், அவருக்காக தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்தனர்.

