விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான 'கொலைகாரன்' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆஷிமா நார்வால். இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்துள்ளார்.
'கொலைகாரன்' படத்தை அடுத்து, பிக்பாஸ் ஆரவ் நாயகனாக நடிக்கும் 'ராஜ பீமா' படத்தில் நாயகியாக நடித்துவரும் ஆஷிமா ஊடகங்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
"இந்தியாவில் பிறந்த நான் ஆஸ்திரே லியாவில் மருத்துவம், ஆரோக்கியம் குறித்த படிப்பை படித்தேன். படிப்பை முடித்துவிட்டு ஒரு புதிய முயற்சியாக மாடலிங்குடன் நடிப்பையும் தேர்ந்தெடுத்தேன்.
"மருத்துவத் துறையிலிருந்த நான் மாடலிங் துறைக்குப் போனது நிச்சயமாக பணம் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக அல்ல, கலைத்துறை மீது எனக்கு இருந்த அதீத ஆர்வமே இதற்கு காரணம்.
"மாடலிங் செய்ய ஆரம்பித்ததும் அழகிப் போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். 'மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ஸ்', 'மிஸ் இண்டியா குளோபல்' என அழகிப் போட்டிகளில் இருமுறை 'டைட்டில்' வென்ற தருணத்தை என்னால் மறக்கவேமுடியாது.
"நான் எதையும் முகத்துக்கு நேராகப் பேசும் குணம் உள்ளவள்.
"முடிவெடுக்கும் திறன், நான் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய தெளிவு என்னிடம் உள்ளது.
"கவர்ச்சியாக நடிப்பதில் கொள்கை என்று எதையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. சினிமாவே கவர்ச்சியான ஒரு துறைதான். எனவே கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பது என்னுடைய எண்ணம்.
"அதேநேரம் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லைக்குள் கவர்ச்சியாக நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. உதாரணத்துக்கு முத்தக் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோன்ற காட்சிகள் தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.
"அத்துடன் தொழில்நுட்பம் மூலம் சுலபமாக அதுபோன்ற காட்சிகளை எடுக்கவும் முடியும். என்னதான் கவர்ச்சியாக நடித்தாலும் எனக்கு தமிழ்ப்பெண்கள்போல உடை உடுத்து வதில்தான் அதிக மகிழ்ச்சி உள்ளது.
"தமிழில் ரஜினி தொடங்கி அனைத்து தமிழ் நாயகன்களுடனும் நடிக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை. அதேநேரம் எனக்குப் பிடித்த நடிகர் என்றால் விஜய். நான் பார்த்தவர்களிலேயே அவர் ஒரு ஸ்டைலான, துடிப்பான நடிகர். அவரின் நடிப்பும் நடனமும் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகைகளில் 'சாவித்ரி' படம் பார்த்தபின் சாவித்திரி அம்மாவை ஒரு சிறந்த நடிகையாகப் பார்க்கிறேன்.
"தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தும் எண்ணம் இல்லை. சினிமாவுக்கு மொழிபேதம் இல்லை. எனவே அனைத்து மொழிப் படங்களிலும் நடிக்கவே விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார் ஆஷிமா நார்வால்.

